வியாழன், 16 செப்டம்பர், 2021

கறங்கு வெள்ளருவி.....

 கறங்கு வெள்ளருவி

__________________________________கல்லிடைக்கீரன்.

(ஓலைத்துடிப்புகள் 111)


கறங்கு வெள்ளருவி கடிமிசை ஆங்கு

களிமென் குரல் படர் தூஉய் தரும்

முரல் மன்றின் பால் திறந்தன்ன‌

கழங்கு ஆடு ஆயம் விளி கிளர் ஓசை

இணர் அவிழ் வீக்களின் இமிழ்தரூஉம்

சிறைமணம் உகந்து அவள் சில்பூ நகையில்

சிறைப்படூஉம் இன்பில் என்பும் கிளத்த

புல்லெனும் சொல்லில் அன்பே என்னும்

அதிர் ஒலி யாழ ஆழி வீழ்ந்தனன்.

எவன் கொல் ஈனும் இக்கதிர் பரி மண்டிலம்.

மண்டை சிதறிய வெண்சோற்றுப் பரலென‌

மண்டிய வான்பூ இனநிரை கொளீஇ

சொல்லின் கீரன் கீறிய சொல் தொறும்

மணிநிறம் அவிழ்க்கும் அணிதிறம் விரிக்கும்.

முருகின் சுள்ளிய வெறியாட்டு அயரும்

நெஞ்சில் வேர்த்து நெருநல் ஊழ்த்து

அவளின் அவிர்சொல் ஓங்கல் தெறித்தன்ன‌

படுகதிர் இரட்டும் ஒலிபு ஊண் ஊட்டும்.

அன்பின் உருகெழு ஓண்கூர் தீட்டி

ஒற்றித்தருகென மைவிழி காட்டும்

யானும் ஒற்றுவன் நயவர நோக்கி.

வெள்ளாறு நீண்டு பொரி படர ஏகும்

நிரம்பா நீளிடை நிழல் சூன்று உண்ணும்

இனிய பாழில் ஊர்ந்தனம் மன்னே.


____________________________________________


தலைவியின் காதல் நிறைந்த சொல்லும்

அன்பு கூர்ந்த விழியும் தலைவனை

காதலின் அடி ஆழத்து ஒரு ஆழிக்குள்

வீழ்த்துகிறது.பாலையின் வெறுமைத்தீயும்

அவனுள் ஒரு தண்ணிய நிழலே ஆகும்.

இக்கருத்தில் நான் எழுதிய சங்கநடைச்

செய்யுள் கவிதை இது

_____________________கல்லிடைக்கீரன்


புதன், 15 செப்டம்பர், 2021

"ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

 "ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு"

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 109)


ஏ கல் அடுக்கத்து இருள் அளைச்சிலம்பு

உறையும் உழுவை துஞ்சுதல் அறியா

அடர் சுரம் நுழைஇ ஆறுபடுகடாம்

அஞ்சுதல் அறியா நீளிலை எஃகமொடு

நீள வைகும் கணைக்கால் கழல‌

இலஞ்சி பழனச் செந்நிலக் குன்றன்

அடுபரல் முரலும் கொடு இடைக் கழிய‌

துடியென இசையும் நெஞ்சொடுக் கிளந்து

கல்லென ஒலிக்கும் கொல்வனத்து ஆரிடை

பயிற்றும் சொல்லே அவள் பேர் சாற்றும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி உய்க்கும் பல்பாற்பட்ட‌

கான்பேராறு கவி இருள் புகுந்துழி

சுரும்பின் நுண்சிறை அதிர வாங்கு

வான்பூச் சினை இடற நோக்கும்.

இறைய நீட்டும் வளையின் வளையின்

இன்னொலி எறியும் மைவிழி தேடி

கலிக்கும் ஒலிமென் கூந்தல் அடர்த்த‌

ஊழி நீள்க்கும் கானாறு தேய்க்கும்

கழி நெடில் அத்தம் இனிதுடன் நந்தும்.


_____________________________________________

அகம் 52..நொச்சி நியமங்கிழார் பாட்டின் 5 ஆம்  வரியை

முதல் வரி ஆக்கி நான் எழுதிய சங்கநடைச்செய்யுள் இது

_____________________________________கல்லிடைக்கீரன்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.

_______________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 110)



காழ்த்த நெடுங்கால் தண்பறைக் குருகின்

களிதுள் கயல்ஆரும் நளிகடல் சேர்ப்ப!

எக்கர் ஞாழல பாசிலை அடைகரை

வதிநிழல் ஓமை பொருந்தாக் காணிய‌

நெய்தலங் கானல் கண்டிசின் பெரும.

மாழை வரிவிழி நுதல் அளை நோக்கில்

ஆகம் அணியிழை சேக்கும் காதலின்

கறை உழற்றன்ன கொடு எழில் பூப்ப‌

புன்கு அவிழ் பொரிப்பூ படர்ந்த நகையில்

அவள் ஆங்கு சுழித்த நாணில் வீழ்தரு நின்

நாணில் நீர்மை கண்டுநனி நெடுவான்

வெட்கும் ஒட்கும் எல் களைந்து எல்லின்

பேஎய் செஞ்சிவப்பின் நீள் வரி போர்த்து.


_________________________________________

காதல் செழித்த தலைவியையும் மறந்து

பரத்தமையின் பால் காமுறும் தலைவனுக்கு

தோழி அறிவுறுத்தியதே இப்பாடல்.புன்கை மரம்

பூத்துச்சொரிந்தது "பொரி" படர்ந்தாற்போல்

இருக்கும் அந்த பரத்தையின் நாணமற்ற‌

சிரிப்பில் தலைவன் விழ்ந்தது அதை விட ஒரு

நாணமற்ற செயல் என தோழி இடித்துக்காட்டுகிறாள்.

அதையே இங்கு என் சங்கநடைச்செய்யுள் கவிதையாக்கி

இங்கு எழுதியிருக்கிறேன்.

______________________________கல்லிடைக்கீரன்





புதன், 1 செப்டம்பர், 2021

தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

 தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

__________________________________________கல்லிடைக்கீரன்

ஓலைத்துடிப்புகள் 108



வாங்கு அமை ஓமையுடன் உரசியக்கால்

தீப்பொறி பூத்த இருள் காடு அன்ன‌

தோன்றா நின்றாள் குவ‌ளையுண் கண்ணாள்

பழுனிய தேறல் தூவும் காற்றிடை

மன்றல் கொண்ட மணித்திரள் குன்றன்

பணைத்தோள் திண்ணன் பார்வை உள்ளி.

மீட்டும் ஒரு கால் தோன்றா நின்றாள்

இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் அன்ன‌

உள்ளே நீறும் தீங்கனிப் பாகர் அழலின்

ஒத்த மெய்ப்பாடு வானம் தோய் சிமையம்

உலகே பார்த்து நாணிய‌ வைத்ததென்னே

கலிமா நெடுந்தேர் செலீஇய வைத்த‌

கார் அறிவாளன் மழை செய்து தந்தான்.

படுமணி இரட்ட ஒலி கேட்டு அவளும்

உள்ளுள் மற்றோர் களிதேர் உருட்டினள்

மண்ணும் விண்ணும் மண்ணிய போல‌

தண்டுளி அருவி இழைந்தனள் மன்னே!

____________________________________________

இது நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை

..........கல்லிடைக்கீரன்

_______________________________________________

சனி, 28 ஆகஸ்ட், 2021

காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.

 காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.

_____________________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 108)



 

பச்சை யாழ் நரம்பின் பண்ணிய‌

பாலை ஓர்ந்த அம்புள் அஞ்சிறை

இணர் துழாஅய் தாது இறைப்ப‌

விண்ணின் மூசு நீடிழை விறைத்து

ஆய் இழை ஆங்கு அவன் நெஞ்சு ஊர‌

நேர்ந்த போழ்தில் இவளும் இமிழும்

வெள்ளருவி வெறியாட்டயர்வ போல்.

ஆன்று அவிந்து ஆங்கு அடங்கினாளன்ன

காவினள் கலனே சுருக்கினள் கலப்பை.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பென‌

நால்வகை கலனும் ஒன்றே வாய்த்து

நீங்கினாள் ஆங்கண் அம்புயல் அன்ன.

கராஅம் கலித்த குண்டுநீர் இலஞ்சி

பெய்யும் நிழலும் கண்விடு ஒளியும்

கதூஉம் கரையில் இனநிரை முதலை

அன்னவன் பரவும் அவள் நோக்கி

அவன் கண்ணுமிழ் சிமிழின் ஒளிகூர.

வேங்கை முன்றில் கூன் வெள் இளம்பிறை

வாங்கு அமை கண்ணிடை புல்லொளி பிலிற்ற‌

வெண்ணிப்பறந்தலை அன்ன மார்பன்

அகலக்கிடந்து துயிலா துயிலில் ஆங்கு

முயங்கல் எழில்நலம்  ஐம்பால் மூடிய‌

அணைப்பில் ஆழ்ந்தாள் நனிகளியுற்றே.

___________________________________________

 

புதன், 25 ஆகஸ்ட், 2021

ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன‌

 ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன‌

___________________________________கல்லிடைக்கீரன்

(ஓலைத்துடிப்புகள் 107)



சீறிலை அங்கொடி அணியிழைக் கூந்தல் 

அலமரல் எழுதகை உருகெழு செத்து

இருபால்  குழன்ற சுரியல் தழீஇய‌

மெல்பூங்காற்றின் அணுக்கம் சிவணிய‌

வருத்தம் நோன்று ஓங்கல் நாடன் 

ஒள்ளிய மௌவல் நிரைத்தன்ன எயிற்றன்

முறுவல் கொய்து மாய்ந்தே மடுக்கும்.

புலம்பு இறை கொள்ளும் வரிமணல் மயிரிய‌

தொடியும் வீழ்தரு துன்பம் பொருதனள்.

உழுவை குத்தினன் வீறு கொள் நடுகல்

குறிசெய்தான் செய்தி அவிழ்த்த தோழி

செந்தழல் பூசி நாணிய செய்தாள் 

எல்லினன் நுங்கிய பெருங்கல் நத்தம்

குருதி சொரிந்தன பேஎய் வீக்கள் போன்ம்.

மாலையும் மடிந்தது வெரூஉய் தந்து.

_____________________________________________

இது எனது சங்கநடை செய்யுட் கவிதை

"கல்லிடைக்கீரன்"

_______________________________________________

கருத்துகள்

யானை தின் கழை வண்டூதப் படுமோ?


யானை தின் கழை வண்டூதப் படுமோ? 

____________________________________________________கல்லிடைக்கீரன்

ஓலைத்துடிப்புகள் 102



நல்குரவு எனும் கொடுவாய்க் கலிமாவின்

செரு வெல்ல யாம் எப்படை உடைத்தோம்?

ஓலை கீறல் அல்லது தலையினை கொய்யும்

மறம் யாண்டு உற்றோம்? வரி பிளத்தல் அன்றி

எஃகம் இலைக் காடு பிளக்கும் துப்பு ஈண்டு

உடைதல் ஆற்றோம் மன்னே.ஆடுநனி மறந்த‌

மண்டை வெறுங்கலம் அடுதீ தீண்டா

கையறு நிலையில் உமணர் நீங்கிய அத்தம் போல

பொரிய காழ்த்த மராஅம் கிடந்தன்ன‌

வற்றிய காலை என்பு வேய் குரம்பை போலும்

உடல் எனும் கூடு உரு அழி நோன்ற‌

ஊழினை என் செய்வம்? இற்ற எம் நரம்பின் 

சீறியாழ் பண்ணிய ஒலி என் ஒலியோ?

யானை தின் கழை வண்டூதப் படுமோ? 

வெண்ணெல் சோற்றின் சுவடு மறந்தோம்.

உள்ளாற்றுக் கவலை  நடுவு கொளீஇ யாமும்

வடக்கும் இருப்போம் வள்ளியோர் 

தேடி எம்முன் வருமுன் காணீர்

கலம் செய் மாக்கள் வரை செய 

விரைவார் ஈண்டு அளியேம் யாமே.

______________________________________________________

கல்லிடைக்கீரன்



குறிப்புரை

____________________


வறுமையின் கொடுமையால் நைந்த

புலவர் ஒருவரின் கையறு நிலைப்பாடல் இது.

புறநானூறு 204 ஆம் பாடல் "கழை தின் யானையார்"

என்னும் புலவரால் பாடப்பட்டது."கழை தின் யானை"

என்னும் சொற்றொடர் அழகும் கருத்தாழமும் மிக்கது.

இதன் உவமை நயமே இவரது பெயரில் புகழ் சேர்க்கும்

அடை மொழி ஆகும்.ஆனால் இந்த உவமை வேறு 

ஒரு பாடலில் அவரால் எழுதப்பட்டுள்ளது.

கழை தின் யானையின் களிப்பு எப்படிப்பட்டது

இருட்டுக்கடை அல்வா சாப்பிடும் திருநெல்வேலிக்காரர்களைத்

தான் கேட்க வேண்டும்.அதே சமயம் வறுமை எனும் யானை

தின்னும் கழையின் நிலை என்னவாக இருக்கும்.அதுவே வறுமையுற்ற 

புலவர் நிலை. உவமையைப்புரட்டிப்போட்டு எனது இந்த‌

சங்கநடைச்செய்யுள் கவிதையை நான் எழுதியுள்ளேன்.

_____________________________________________________கல்லிடைக்கீரன்

(பொழிப்புரை தொடரும்)



திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கலம் செய் கோவே கலம் செய் கோவே!

 கலம் செய் கோவே கலம் செய் கோவே!

______________________________கல்லிடைக்கீரன்.

(ஓலைத்துடிப்புகள் 106)




கலம் செய் கோவே கலம் செய் கோவே!

எனக்கும் ஒரு கலம் செய்கவென‌

வேண்டுவேன் இல்லை தெளிமின்  தெளிமின்.

அவன் இருந்த நிழலை உயிர்ப்பித்தன்ன‌

உருகெழு ஞாயிறு போன்ம் யான் ஈண்டு

குணம் கிழிப்பேன் செங்கடல் திரையாய்.

பெண்மையும் இவண் ஒரு வெண்குடை நிழற்ற

ஆண்மை நீர ஆள் தேர் உருட்டி

முந்நீர் வேலியுள் முழு ஞாலம் திரிய‌

பண்டு கொள்ளை பிணித்த நோயை

தீர ஓட்டி பகுத்தே செல்வம் பலரும் துய்க்கும்

பூட்கை இலங்கு வல்லிய நாடென‌

வகைசெய் திறனொடு அவன் அமர்ந்தன்ன

பகைஞர் நெறித்து  நல் ஆறு உய்க்கும்.

அழல்படு பாயல் மறுத்தனன் என்னே

என மருளும் தெருளும் மண்டிய நோக்கம்

அவிமின் அவிமின் இக்கொடுங்கூற்றின்

அழல் மொழி பற்றிய‌  தீ மொழி யாவும்.

பெண் எனும் பூவை குரங்கு கைச்சூடும்

புன்மையின் கேண்மை நச்சிய சொல்லின்

பேழ்வாய்க் காட்டில் பேய் மறை கொல்க.

______________________________________________

இது எனது சங்கநடை செய்யுட் கவிதை

"கல்லிடைக்கீரன்."