திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கலம் செய் கோவே கலம் செய் கோவே!

 கலம் செய் கோவே கலம் செய் கோவே!

______________________________கல்லிடைக்கீரன்.

(ஓலைத்துடிப்புகள் 106)




கலம் செய் கோவே கலம் செய் கோவே!

எனக்கும் ஒரு கலம் செய்கவென‌

வேண்டுவேன் இல்லை தெளிமின்  தெளிமின்.

அவன் இருந்த நிழலை உயிர்ப்பித்தன்ன‌

உருகெழு ஞாயிறு போன்ம் யான் ஈண்டு

குணம் கிழிப்பேன் செங்கடல் திரையாய்.

பெண்மையும் இவண் ஒரு வெண்குடை நிழற்ற

ஆண்மை நீர ஆள் தேர் உருட்டி

முந்நீர் வேலியுள் முழு ஞாலம் திரிய‌

பண்டு கொள்ளை பிணித்த நோயை

தீர ஓட்டி பகுத்தே செல்வம் பலரும் துய்க்கும்

பூட்கை இலங்கு வல்லிய நாடென‌

வகைசெய் திறனொடு அவன் அமர்ந்தன்ன

பகைஞர் நெறித்து  நல் ஆறு உய்க்கும்.

அழல்படு பாயல் மறுத்தனன் என்னே

என மருளும் தெருளும் மண்டிய நோக்கம்

அவிமின் அவிமின் இக்கொடுங்கூற்றின்

அழல் மொழி பற்றிய‌  தீ மொழி யாவும்.

பெண் எனும் பூவை குரங்கு கைச்சூடும்

புன்மையின் கேண்மை நச்சிய சொல்லின்

பேழ்வாய்க் காட்டில் பேய் மறை கொல்க.

______________________________________________

இது எனது சங்கநடை செய்யுட் கவிதை

"கல்லிடைக்கீரன்."

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக