யானை தின் கழை வண்டூதப் படுமோ?
____________________________________________________கல்லிடைக்கீரன்
ஓலைத்துடிப்புகள் 102
நல்குரவு எனும் கொடுவாய்க் கலிமாவின்
செரு வெல்ல யாம் எப்படை உடைத்தோம்?
ஓலை கீறல் அல்லது தலையினை கொய்யும்
மறம் யாண்டு உற்றோம்? வரி பிளத்தல் அன்றி
எஃகம் இலைக் காடு பிளக்கும் துப்பு ஈண்டு
உடைதல் ஆற்றோம் மன்னே.ஆடுநனி மறந்த
மண்டை வெறுங்கலம் அடுதீ தீண்டா
கையறு நிலையில் உமணர் நீங்கிய அத்தம் போல
பொரிய காழ்த்த மராஅம் கிடந்தன்ன
வற்றிய காலை என்பு வேய் குரம்பை போலும்
உடல் எனும் கூடு உரு அழி நோன்ற
ஊழினை என் செய்வம்? இற்ற எம் நரம்பின்
சீறியாழ் பண்ணிய ஒலி என் ஒலியோ?
யானை தின் கழை வண்டூதப் படுமோ?
வெண்ணெல் சோற்றின் சுவடு மறந்தோம்.
உள்ளாற்றுக் கவலை நடுவு கொளீஇ யாமும்
வடக்கும் இருப்போம் வள்ளியோர்
தேடி எம்முன் வருமுன் காணீர்
கலம் செய் மாக்கள் வரை செய
விரைவார் ஈண்டு அளியேம் யாமே.
______________________________________________________
கல்லிடைக்கீரன்
குறிப்புரை
____________________
வறுமையின் கொடுமையால் நைந்த
புலவர் ஒருவரின் கையறு நிலைப்பாடல் இது.
புறநானூறு 204 ஆம் பாடல் "கழை தின் யானையார்"
என்னும் புலவரால் பாடப்பட்டது."கழை தின் யானை"
என்னும் சொற்றொடர் அழகும் கருத்தாழமும் மிக்கது.
இதன் உவமை நயமே இவரது பெயரில் புகழ் சேர்க்கும்
அடை மொழி ஆகும்.ஆனால் இந்த உவமை வேறு
ஒரு பாடலில் அவரால் எழுதப்பட்டுள்ளது.
கழை தின் யானையின் களிப்பு எப்படிப்பட்டது
இருட்டுக்கடை அல்வா சாப்பிடும் திருநெல்வேலிக்காரர்களைத்
தான் கேட்க வேண்டும்.அதே சமயம் வறுமை எனும் யானை
தின்னும் கழையின் நிலை என்னவாக இருக்கும்.அதுவே வறுமையுற்ற
புலவர் நிலை. உவமையைப்புரட்டிப்போட்டு எனது இந்த
சங்கநடைச்செய்யுள் கவிதையை நான் எழுதியுள்ளேன்.
_____________________________________________________கல்லிடைக்கீரன்
(பொழிப்புரை தொடரும்)
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக