ஞாயிறு, 25 மே, 2014

காப்பியாற்றுப்படை.

picasabackground.jpg
இது எங்கள் ஊர்  தாமிரபரணி ஆறு தான் (ஆறுதலுக்காக )

காப்பியாற்றுப்படை.
==========================================ருத்ரா இ.பரமசிவன்

நெடுங்காந்தள் மூசிய அடைகரை அன்ன‌
வால் இயற்றிய வளைஇளம் நெற்றி
கண்விழித்தாங்கு மொழி ப‌டாத்து மடமை
காப்பியாறு இமிழ்தரு இன்னொலியின்
கதுப்பு சிவந்தவள் மணிகிளர் காட்சி.
கழைபடுத்த பாம்பின் நுண்ணுரி சுற்ற‌
இலஞ்சி நீழல் குவி இணர் கவிக்க‌
எழிலுண் மைக்கடல் எறிதிரை ஏய்ப்ப‌
குணில் பாய் முரசம் உள்ளொலி எதிர‌
மழைக்கண் கொண்டு பேய்வெள்ளருவி
மலர் பொருது மற்று மண் பொருது இறங்கி
பொறிப்பரல் முரல நீர்வழி போன்ம்
நீடிய நெஞ்சின் அளியவள் காட்சி.
முதிர்கான் போழ்ந்த வெண்ணிய காலை
முழைகள் ஒளியும் அதிர்செவி முயலாய்
காட்டி காட்டி மறைக்கும் மன்றிடை
கள்ளநகையாள் அவிழ்தரும் நகையுடன்
சிந்திய சொல்லில் வித்திய முதிர்நெல்
விளைதரும் என்று பலவு வீழ்த்த‌
படப்பை தோறும் குறியின் எதிர்த்து
கிடந்துழி யாண்டு காண்குவன் மன்னே.
மணிமிடைப்பவளமும் களிற்றியானை நிரையும்
நித்திலக்கோவையுள் தொகைத்த தொகையாய்
அகம் குமிழ்த்தாள் அகவல் கேட்டேன்.
அலரி தூஉய் வெண்காடு செத்து வெரூஉய்
வல்நெடுங் கூர் ஒலி வதைபட கேட்டேன்
என் உயிர் கொல் ஓதை முளிகால் பிசைந்து
விண்ணும் நிரவி மண்ணில் வேர்க்கும்.
பஃறுளி பாய்ந்து புல் தலை தடவிய‌
களித்தமிழின் காப்பியாற்றுப்படை இஃது.

=======================================ருத்ரா
பெப். 07 -2014--03.23.மாலை.


பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தில் உள்ள செய்யுட்களை எழுதியவர் "காப்பியாற்றுக் காப்பியனார்".இதில் இவர் களாங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எனும் சேர மன்னனைப்பாடியுள்ளார்.சேர நாட்டில் ஓடும் ஒரு ஆறு காப்பியாறு.

அதை வைத்து எழுதிய சங்கநடைக் கவிதை எனது இக்கவிதை.
தலைவன் "காப்பியாற்றங்கரை" வழியே போய்
அந்த அடர்ந்த காட்டின் உள்ளொலியில்
தலைவியின் கள்ளநகைப்பொலி கேட்டு
களிக்கும் காட்சியைப்பற்றிய கவிதை இது)

==========================================



அரும்பொருளுரை
=====================================ருத்ரா

நெடிய காந்தள் மலர்கள் அடர்ந்த (மூசிய) செடிகள் அடைந்தாற்போல் உள்ள
ஆற்றங்கரையை ஒக்குமாறு

ஒளி(வால்) இயல்பானதாகவே விளங்கும்படி (இயற்றிய)வளைந்த இளைய‌
நெற்றியை உடையவள்

அந்த நெற்றியையே அகன்ற கண்ணாக்கி ஒரு (மறை)மொழியை அதன் மீது
முகப்படாம் போல் போர்த்து ஒன்றும் அறியாதவள் போல்(மடமை)நிற்பவள்

காப்பியாறு (அந்த ஊருக்கு வளம் தந்து காக்கும் ஆறு)நீர்ச்சிதறல்களால்
மெல்லிதாக இசைக்கும்(இமிழ் தரு)இனிய ஒலியால் (கிளு கிளுப்பு அடைந்து)

கன்னம் சிவந்தவளாய் மாணிக்கக்கல் போன்று ஓளிசிந்தும் அந்தக்காட்சி..


மூங்கில்மீது இழைந்த பாம்பின் நுண்ணிய தோல்(பாம்பு உரி)சுற்றியிருக்க‌

நீர்ச்சுனை(இலஞ்சி)யில் படிந்த நிழல் அருகுள்ள பூங்கொத்துக்குவியல்களால் (குவி இணர்)கவிந்து இருக்க‌

அது போல் எழில் உண்ட கருப்புக்கடல்(மை தீட்டப்பட்டதால்) வீசும் அலைகள்
போன்ற ஒரு மாயத்தோற்றம் செய்து ஏய்க்கும் கண்கள்

முரசுவின் மீது விழும் தடிகள் (குணில்)ஏற்படுத்தும் ஒலிகள் போன்ற உள்ளத்து ஏக்கத்தின் ஒலிகள் எதிரொலிக்க‌

ஈரம் சொட்டும்குளிர்விழிகளால்(மழைக்கண்)மிகவும் பெருகிய (பேய்)வெள்ளி போன்ற அருவி

மலர்களைத் தாக்கி மற்றும் மண்திட்டுகளைத் தாக்கி (பொருது)விழும் அருவி
புள்ளிகள் நிறைந்த கூழாங்கற்கள் நீர் ஓட்டத்தில் உருண்டு ஒலிக்க(முரல)விரையும் ஓடை போல்

நீரின் நீண்ட பாதையில் ஏக்கம் நிறைந்த அந்த (பரிதாபத்துக்கு அல்லது இரக்கத்திற்குரிய)(அளியவள்)தலைவியின் காட்சி.

அடர்ந்த காட்டுள் நுழைந்த வெண்கதிர் வெளிச்சம் நிறைந்த ஒரு காலைப்பொழுதில்

பொந்துகள்(சிறிய குகைகள் போன்றவை)(முழைகள்) தோறும் ஒளிந்து ஒடும் நடுங்கும் செவிகள் உடைய முயல் போல்

பொய்ச்சிரிப்பு செய்யும் தலைவி மெய்ச்சிரிப்புகளையும் அவ்வப்போது அவிழ்த்து விடுவாள் (அது எப்போது என்று யார் அறிவார்?)

அந்த சிரிப்புகளோடு சில சொற்களையும் உதிர்த்து முற்றிய விதைநெற்கள் போன்று விதைப்பாள்

அதுவும் விளைச்சல் தரும் என்று எண்ணி பலாக்கனிகள் (பலவு) மரத்தின் அடிப்பகுதியில் வீழ்த்திக்கொண்டு பழுக்கத் தோன்றும்(வீழ்த்த)

வளத்தோட்டங்களில்(படப்பை)தலைவி வந்து நிற்பதாகச்சொன்ன
இடத்தில்(குறியின்) எதிர்பார்த்துக்காத்து (எதிர்த்து)

அவளை பார்த்தே தீருவேன் என்று அங்கே (பழியாய்)கிடக்கும்பொழுது (கிட‌ந்துழி) (மன்னே...அசைச்சொல்)


மணிமிடைப்பவளம் (ரத்தினங்களிடையே பவளங்கள்)
களிற்றியானை நிரை (களிறு (ஆண் யானை)களின் கூட்டம்)
நித்திலக்கோவை (முத்துக்குவியல்)
இவை காதலின் சாறுதனை பிழிந்து தரும் அகநானூற்றுப்பாடல்கள்
ஆனால் அவள் இவ்வெல்லாப்பாடல்களையும் தொகுத்து அதை ஒரு தொகையாய் (தொகுத்த தொகையாய்)தந்தாள்.

அதைத் தான் அவள் நெஞ்சில் குவிந்து கூர்ந்து ஒலித்தாள்.
(அகம் குமிழ்த்தாள்)
என் நெஞ்சைக்கவ்வும் அவ்வொலி (அகவல் ஒலி)நான் கேட்டேன்.
அது எப்படி இருந்தது?

சிறு வெள்ளைப்பூக்கள்(அலரி)சிதறி தூவிய ஒரு பெரும் வெண்காடு போல‌
(வெண்காடு செத்து)ஒரு மெல்லிய அச்சத்தையும் படரச்செய்தது.(வெரூஉய்)

நீண்டதாயும் கூர்மை கொண்டு நெஞ்சு பிளப்பதாயும் அந்த ஒலி என்னை வதைப்பது போலவும் கேட்டேன்.
"என் உயிரைக்கொல்லும் ஓசை அது"என்றும் கொள்ளலாம்.
"அந்த ஒலி தானோ என் உயிர்?"என்றும் கொள்ளலாம்.
பின்னதில் கொல் என்பது அசைச்சொல்.(தானோ)

ஆனால் அந்த ஒலி "குழைவு தன்மை உடைய காற்றை"(முளி கால்)பிசைந்து செய்யப்பட்டது போன்று தலைவன் உணர்கிறான்.
அது வானம் பரவி மண்ணிலும் வேர்விடும்(வேர்க்கும்)
காப்பியாற்றின் வழி எப்படி உள்ளது?
அது பலதுளிப் பெருவெள்ளமாய் அங்கு விரிந்து படர்ந்த புல்வெளியையும் தடவி இழையும் ஆறு இது.களிப்பு பொங்கும் தமிழில் வந்த காப்பியாறு வழி ஏற்படுத்திக்கொண்டு பாயும் காப்பியாற்றுப்படை.இதில் தலைவியின் மென் சிரிப்பின் ஒலியும் சொல் துளிகளும் தூவிக்கிடந்து எழில் கொஞ்சுகிறது.

_____________________________________________ருத்ரா இ.பரமசிவன்

வெள்ளி, 23 மே, 2014

நற்றிணையில் நக்கீரன்

SOB-Volcano-13.jpg

http://wesphelan.com/wp-content/uploads/2014/02SOB-Volcano-13.jpg---
WITH COURTESY GOOGLE IMAGES



  


நற்றிணையில் நக்கீரன்
=========================================ருத்ரா இ.பரமசிவன்

"அறவர் வாழ்க"

(ந‌ற்றிணைப் பாடல் 86)

இயற்றியது ...நக்கீரர்.


========================


"அறவர் வாழி தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல‌
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அற்சிரம் நடுங்கக் காண் தகக்
கைவில் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்க‌ம் குவிமுகை அவிழ‌ ஈங்கை
ந‌ல்த‌ளிர் ந‌ய‌வ‌ர‌ நுட‌ங்கும்
முற்றா வேனில் முன்னிவ‌ந் தோரே!"


===========================================


இய‌ற்கையெழிலை
இன்சுவை ஏற்றி
இய‌ற்றுவ‌தில் வ‌ல்லதோர் கீர‌ன்
ந‌க்கீர‌ன் த‌ந்த‌
ந‌ய‌மிகு க‌விதை இது!
நினைத்துப் நினைத்துப்படித்தால்
ஊர்வ‌ல‌ம் போகும்
எழுத்துக்குள் எல்லாம்
துரும்புக‌ள் கூட‌
தூரிகையாகி
காட்சிக‌ள் விரிக்கும்.
அற‌ வாழ்வைக் கூட‌
ம‌ற‌ம் சொட்டும்
வீர‌ம் தோய்த்து
விய‌க்க‌ வைப்ப‌வன் நக்கீரன்.

பொருள் தேடி
கொடிய‌ பாலையை எல்லாம்
க‌ட‌ந்து திரும்பிய‌வ‌னின்
க‌ர‌டு முர‌டு வ‌ரிக‌ளுக்குள்ளும்
க‌ண் ந‌னைக்கும்
காத‌ல் உயிர்ப்பை
க‌திர் விரிப்பு ஆக்கிய‌
க‌விதையின் ம‌ன்ன‌ன் ந‌க்கீர‌ன்.


காத‌ல் பிரிவு
வேல் கொண்டு குத்திய‌
புண்போல் இருப்பினும்
"விரிந்த‌ க‌துப்பின் தோல‌"
என்று
அது கிழிக்கும் ச‌தை கூட‌
விரிந்த‌ "ப‌க‌ன்றை" ம‌ல‌ர் போல்
இருக்கிற‌தாம்.
அடுக்கு மல‌ர் இத‌ழ் போன்ற‌
வெள்ளித்தட்டில் கூட‌
வெள்ளைச்சோறு
அந்த‌ காத‌ல் எனும் வேல்
பிசைந்த‌ துன்ப‌மே காட்டும்.
"பாண்டில்" எனும் வ‌ட்டில்
உண‌ர்த்தும் சொல்லைக்காட்டி
ந‌க்கீர‌ன்
ந‌ம் நெஞ்சைப் பிழிகிறார்.
இன்னும் காத‌ல் துய‌ரை
ஊசிம‌ழை பெய்யும்
முன் ப‌னி("அற்சிர‌ம்") விரித்த‌
முள் ப‌டுக்கையை காட்டி
ந‌ம் ம‌ன‌த்தை கூறு போடுகிறார்.
அது ஏற்ப‌டுத்தும் ந‌டுக்க‌ம்
எப்ப‌டி இருக்கிற‌து?
சிற‌ந்த‌ பொற்க‌லைஞ‌ன் செய்த‌
சுரித‌க‌ம் எனும் காத‌ணி
வ‌ட்ட‌ வ‌ட்ட‌ குழையாய்
தோன்றினாலும்
கோங்க‌ ம‌ர‌த்து முகிழ் முகைக‌ள் போல்
அவை அந்த‌ "விர‌க"ப்ப‌னியில்
ந‌டு ந‌டுங்கி
அவ‌ள் நெஞ்சுக்குள் பூக்கும்
குமிழிக‌ளை
ந‌ம் க‌ண்முன் காட்டுகிற‌து.
அந்த‌ "ஈங்கை" யின் இலைக‌ள்
ந‌டுங்குவ‌தில்
அவ‌ள் த‌ளிர் முக‌ம் அல்லவா
ந‌டுங்கிக்கொன்டிருக்கிற‌து.
இத‌னை
"ந‌ல் த‌ளிர் ந‌ய‌வ‌ர‌ நுட‌ங்கும்"
என்கிறார்.
முக‌ம் துடித்த‌ போதும்
அத‌னுள் அவ‌ள் அக‌ம் எழில் கூட்டுகிற‌து.
"ந‌ய‌ வ‌ர‌" என்ற சொல்
ந‌யாக‌ரா போல் பிரம்மாண்ட‌மான‌து.
அதில் ஒரு காதலின்
பேரிரைச்ச‌ல் உங்க‌ளுக்கு
கேட்க‌வில்லையா?
உங்க‌ளுக்கு கேட்கிற‌தோ இல்லையோ
த‌லைவ‌னுக்கு கேட்டு விட்ட‌து.
அதோ ஓடி வ‌ருகிறான்.
முற்றாவேனில்
முக‌ம் காட்டும் முன்ன‌ரே
த‌ன் முக‌ம் காட்ட‌
அதோ
த‌விப்போடு வ‌ந்துகொண்டிருக்கிறான்.

ந‌க்கீர‌ன்
ப‌னைஓலைக‌ளில்
இந்த‌ எரிம‌லையைப்ப‌ற்ற‌ வைத்தும்
அவ‌ன் எழுத்துக‌ள் ம‌ட்டுமே
அவ‌ள் நெஞ்சில் கொழுந்துவிட்டு
எரிவ‌து
உங்க‌ளுக்கு சுடுகிற‌தா?
இதுவே செம்மொழியின் ஒளி.


==========================================ருத்ரா இ.பரமசிவன்.

06.06.2010




செவ்வாய், 20 மே, 2014

உழுவை கொடும்பல்


courtesy with thanks to GOOGLE IMAGES


உழுவை கொடும்பல்
===============================================ருத்ரா இ.பரமசிவன்

மைபொதி குவளையுண்கண் மறைபு
மணிவளை பொத்தி இமையுள் இருத்தி
துஞ்சல் செயிர்த்தன்ன தூவியள் நுடங்க‌
அன்னையும் அகல்வாள் நெஞ்சம் தேற்றி.
ஊழ் ஊழ் இமை பேழ் தூங்கா அன்னை 
வினவுங்காலை ஆண்டோர் ஈர்நிலா காட்டும்
மாடம் வழிய வெள்ளி ஒழுகும் 
முகம் அன்ன ஏய்க்கும் மதிகண்டு அமையும்.
மகளோ மென்னகை இமிழ்தர கள்ளிச்சிரிக்கும்.
முன்னொரு கால் வட்டில் ஏந்தி நிலவு காட்டி
ஏய்த்தாய் அன்னாய் நெய்வழி சோறுஅன்பின் ஊட்ட.
அது போன்ம் கண்டி இவண் வெண் பெருநிலா.
யானோர் நாள் பெண்ணைக்காய் 
குடை தேர் உருட்டக் கண்டாய் ஆற்றாது
பொற்றேர் ஈண்டு நீ இருக்க எற்றுக்கு
போய்த்தேர் உருட்டென  உள் உள் ஒள்குவை.
யாதாயினும் அன்னாய் நெஞ்சம் தேற்று.
நிலவு கண்டு நீள்துயில் ஒழுகு.
துடிவு கொள் இமைகள் துயர் அடுக்கிய கண்
நடுங்குதல் உற்று மெய் அதிரும்.
இரவின் குறி வரு இருந்தாள் குன்றன்
கையொடு செலவின் கொடுமலிக் காட்சி
கண்டுழி என் செயும் மணிவயிற்றாளென.
உழுவை கொடும்பல் வருடை கிழிப்ப‌
தோன்றக்கண்டு மழைக்கண் ஊழ்க்கும் மற்று
கைவளை நெரித்து கலங்கும் மன்னே.

=================================================ருத்ரா


பொருளுரைச்சுருக்கம்
__________________________________________________


கட்டிலில் புரண்டு புரண்டு படுக்கும் பெண்.கருப்பு மை பூசிய குவளை போன்ற அவள் கண்களின் இமைகளை அமுக்கி அமுக்கிப்பார்க்கிறாள்.தூக்கம் வரவில்லை.தூவி போல மெல்லிய அவள் துவள்கிறாள்.தாய் மகள் தூங்கிவிடுவாள் என்று அகல்கிறாள்.தாய் அவள் தூங்குகிறாளா இல்லையா என வினவிக்கொண்டேயிருக்கிறாள்.திரும்ப திரும்ப அம்மாவின் இமைகளும் பிளந்து பிளந்து துங்க மறுக்கிறது.மகளோ அன்னையிடம் "அதோ அந்த நிலவைப்பார்.பார்த்துக்கொண்டே தூங்கு"என்று சொல்கிறாள்.அப்படிச்சொல்லும் போது அவள் தனக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொள்கிறாள்."நீ எத்தனை தடவை நிலவை காட்டி ஏமாற்றி சோறு ஊட்டியிருப்பாய்.இப்போது நானும் நிலவைக்காட்டி உன்னை ஏமாற்றப்போகிறேன்." என் நன்மை தானே உன் எண்ணம்.ஆம் என் காதலனோடு வீட்டை விட்டே புறப்படபோகிறேன்..என்ற நினைப்பில் சிரித்துக்கொள்கிறாள்.அன்னையும் தன் மகளின் முகம் நிலவு போல் பொங்கி பூரித்திருக்கக்கண்டு அமைதி கொள்கிறாள்.மகளுக்கு பழைய நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.பனங்காய்களை குடைந்து வண்டி போல் செய்து தேர் ஓட்டி விளையாடிய நாட்கள் நினைவுக்குவருகின்றன. அப்போது அன்னை சொன்னதும் நினைவுக்கு வருகிறது."பொன்னில் வார்க்கப்போட்ட தேர் போல இருக்கிறாயே.(ஆண் குழந்தைகள் போல் தேர் ஓட்டும் துணிவு இவளுக்கு எப்படி வந்தது என்று அன்னைக்கு தோன்றியிருக்கலாம்).இருப்பினும் "உனக்கு எதற்கு இந்த பொ(ய்)ம்மைத் தேர்? என்று கேட்கிறாள்.அதெல்லாம் அங்கே அவளிடம் இப்போது நினைவலைகளாக வட்டமிடுகின்றன.இரவு நீள்கிறது.இன்னும் சிறிது நேரத்தில் காதலனுடன் ஓடி விடப் போகிறோமே? அன்னையின் நெஞ்சம் என்ன பாடு பாடும்?அவள் ஒரு கணம் நடுங்கிப்போகிறாள்.அன்னையின் கண்களுக்கு ஒரு புலியின் கோரைப்பற்களில் கிழிபடும் ஒரு வருடை மான் குட்டியின் காட்சி தான் தென்படுகிறது.இதை நினத்ததும் கண்களில் கண்ணீர் பிரளயமாய் பொங்க பொங்க என்ன செய்வது எனத்தெரியாமல் தன் கைவளையல்ளை நெரித்துக்கொண்டு செய்வதறியாமல் கலங்குகிறாள் அந்த பேதை மகள்


===================================================ருத்ரா இ.பரமசிவன்

திரை இமிழ் தமிழ்!

SDC11418.JPG

திரை இமிழ் தமிழ்!

==========================ருத்ரா இ.பரமசிவன்

தமிழுக்கு சிறப்பு "ழ"கரம்.
ஐய்யாயிரம் ஆண்டுக்கும்
முன்னேயே நம் தமிழின் நகரம்.
சிந்துவெளிப்படுகையில் நாம்
சிந்திய தமிழ் ஒலிப்புகளும்
செதுக்கிய வரி வடிவங்களும்
திரை கடலோடி செழிப்பு கொண்டு
திரைவிடம் (திராவிடம்)ஆனது.
அலைகளின் அடுக்குகளில் 
அமிழ்து அமிழ்து அமிழ்து
தமிழ் ஆகி அறிவு சேர்த்தோம் நாம்.
திரை இமிழ் மொழியே
இன் தமிழ் ஆனது.
தமிழ் எலும்பு ஃபாசில்கள் எல்லா
உலக மொழிகளிலும்
உள்ளுறைந்து கிடக்கிறது.
இதன் நினைவெழுச்சியில்
நிமிர்ந்த நகரமே இந்த "ழகரம்."
அஞ்சிறைத் தமிழ்த்தும்பிகளே
தமிழ்க்காமம் செப்பியே 
கண்டது மொழிமின்.

அன்புடன் ருத்ரா


செவ்வாய், 6 மே, 2014

"ழ"கரம்.

SDC11588.JPG
ருத்ரா இ.பரமசிவன்




வரலாற்று அலை நீந்தி
குமரிக்கடலுக்குள்
அகழ்வாராய்ச்சி செய்வோம்
"ழ"கரம் எனும் நகரம் தேடி.
இரைச்சல் காடுகள் சல சலத்த‌
நாவுகளில்
காவு கொடுத்துவிட்டோமோ
நம் அருந்தமிழை?
தமிழ் வளர்ப்போம்.
தமிழ் காப்போம்.

நட்புடன்
ருத்ரா இ.பரமசிவன்
.