கறங்கு வெள்ளருவி
__________________________________கல்லிடைக்கீரன்.
(ஓலைத்துடிப்புகள் 111)
கறங்கு வெள்ளருவி கடிமிசை ஆங்கு
களிமென் குரல் படர் தூஉய் தரும்
முரல் மன்றின் பால் திறந்தன்ன
கழங்கு ஆடு ஆயம் விளி கிளர் ஓசை
இணர் அவிழ் வீக்களின் இமிழ்தரூஉம்
சிறைமணம் உகந்து அவள் சில்பூ நகையில்
சிறைப்படூஉம் இன்பில் என்பும் கிளத்த
புல்லெனும் சொல்லில் அன்பே என்னும்
அதிர் ஒலி யாழ ஆழி வீழ்ந்தனன்.
எவன் கொல் ஈனும் இக்கதிர் பரி மண்டிலம்.
மண்டை சிதறிய வெண்சோற்றுப் பரலென
மண்டிய வான்பூ இனநிரை கொளீஇ
சொல்லின் கீரன் கீறிய சொல் தொறும்
மணிநிறம் அவிழ்க்கும் அணிதிறம் விரிக்கும்.
முருகின் சுள்ளிய வெறியாட்டு அயரும்
நெஞ்சில் வேர்த்து நெருநல் ஊழ்த்து
அவளின் அவிர்சொல் ஓங்கல் தெறித்தன்ன
படுகதிர் இரட்டும் ஒலிபு ஊண் ஊட்டும்.
அன்பின் உருகெழு ஓண்கூர் தீட்டி
ஒற்றித்தருகென மைவிழி காட்டும்
யானும் ஒற்றுவன் நயவர நோக்கி.
வெள்ளாறு நீண்டு பொரி படர ஏகும்
நிரம்பா நீளிடை நிழல் சூன்று உண்ணும்
இனிய பாழில் ஊர்ந்தனம் மன்னே.
____________________________________________
தலைவியின் காதல் நிறைந்த சொல்லும்
அன்பு கூர்ந்த விழியும் தலைவனை
காதலின் அடி ஆழத்து ஒரு ஆழிக்குள்
வீழ்த்துகிறது.பாலையின் வெறுமைத்தீயும்
அவனுள் ஒரு தண்ணிய நிழலே ஆகும்.
இக்கருத்தில் நான் எழுதிய சங்கநடைச்
செய்யுள் கவிதை இது
_____________________கல்லிடைக்கீரன்