வெள்ளி, 23 மே, 2014

நற்றிணையில் நக்கீரன்

SOB-Volcano-13.jpg

http://wesphelan.com/wp-content/uploads/2014/02SOB-Volcano-13.jpg---
WITH COURTESY GOOGLE IMAGES



  


நற்றிணையில் நக்கீரன்
=========================================ருத்ரா இ.பரமசிவன்

"அறவர் வாழ்க"

(ந‌ற்றிணைப் பாடல் 86)

இயற்றியது ...நக்கீரர்.


========================


"அறவர் வாழி தோழி! மறவர்
வேல் என விரிந்த கதுப்பின் தோல‌
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும்
கடும்பனி அற்சிரம் நடுங்கக் காண் தகக்
கைவில் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்க‌ம் குவிமுகை அவிழ‌ ஈங்கை
ந‌ல்த‌ளிர் ந‌ய‌வ‌ர‌ நுட‌ங்கும்
முற்றா வேனில் முன்னிவ‌ந் தோரே!"


===========================================


இய‌ற்கையெழிலை
இன்சுவை ஏற்றி
இய‌ற்றுவ‌தில் வ‌ல்லதோர் கீர‌ன்
ந‌க்கீர‌ன் த‌ந்த‌
ந‌ய‌மிகு க‌விதை இது!
நினைத்துப் நினைத்துப்படித்தால்
ஊர்வ‌ல‌ம் போகும்
எழுத்துக்குள் எல்லாம்
துரும்புக‌ள் கூட‌
தூரிகையாகி
காட்சிக‌ள் விரிக்கும்.
அற‌ வாழ்வைக் கூட‌
ம‌ற‌ம் சொட்டும்
வீர‌ம் தோய்த்து
விய‌க்க‌ வைப்ப‌வன் நக்கீரன்.

பொருள் தேடி
கொடிய‌ பாலையை எல்லாம்
க‌ட‌ந்து திரும்பிய‌வ‌னின்
க‌ர‌டு முர‌டு வ‌ரிக‌ளுக்குள்ளும்
க‌ண் ந‌னைக்கும்
காத‌ல் உயிர்ப்பை
க‌திர் விரிப்பு ஆக்கிய‌
க‌விதையின் ம‌ன்ன‌ன் ந‌க்கீர‌ன்.


காத‌ல் பிரிவு
வேல் கொண்டு குத்திய‌
புண்போல் இருப்பினும்
"விரிந்த‌ க‌துப்பின் தோல‌"
என்று
அது கிழிக்கும் ச‌தை கூட‌
விரிந்த‌ "ப‌க‌ன்றை" ம‌ல‌ர் போல்
இருக்கிற‌தாம்.
அடுக்கு மல‌ர் இத‌ழ் போன்ற‌
வெள்ளித்தட்டில் கூட‌
வெள்ளைச்சோறு
அந்த‌ காத‌ல் எனும் வேல்
பிசைந்த‌ துன்ப‌மே காட்டும்.
"பாண்டில்" எனும் வ‌ட்டில்
உண‌ர்த்தும் சொல்லைக்காட்டி
ந‌க்கீர‌ன்
ந‌ம் நெஞ்சைப் பிழிகிறார்.
இன்னும் காத‌ல் துய‌ரை
ஊசிம‌ழை பெய்யும்
முன் ப‌னி("அற்சிர‌ம்") விரித்த‌
முள் ப‌டுக்கையை காட்டி
ந‌ம் ம‌ன‌த்தை கூறு போடுகிறார்.
அது ஏற்ப‌டுத்தும் ந‌டுக்க‌ம்
எப்ப‌டி இருக்கிற‌து?
சிற‌ந்த‌ பொற்க‌லைஞ‌ன் செய்த‌
சுரித‌க‌ம் எனும் காத‌ணி
வ‌ட்ட‌ வ‌ட்ட‌ குழையாய்
தோன்றினாலும்
கோங்க‌ ம‌ர‌த்து முகிழ் முகைக‌ள் போல்
அவை அந்த‌ "விர‌க"ப்ப‌னியில்
ந‌டு ந‌டுங்கி
அவ‌ள் நெஞ்சுக்குள் பூக்கும்
குமிழிக‌ளை
ந‌ம் க‌ண்முன் காட்டுகிற‌து.
அந்த‌ "ஈங்கை" யின் இலைக‌ள்
ந‌டுங்குவ‌தில்
அவ‌ள் த‌ளிர் முக‌ம் அல்லவா
ந‌டுங்கிக்கொன்டிருக்கிற‌து.
இத‌னை
"ந‌ல் த‌ளிர் ந‌ய‌வ‌ர‌ நுட‌ங்கும்"
என்கிறார்.
முக‌ம் துடித்த‌ போதும்
அத‌னுள் அவ‌ள் அக‌ம் எழில் கூட்டுகிற‌து.
"ந‌ய‌ வ‌ர‌" என்ற சொல்
ந‌யாக‌ரா போல் பிரம்மாண்ட‌மான‌து.
அதில் ஒரு காதலின்
பேரிரைச்ச‌ல் உங்க‌ளுக்கு
கேட்க‌வில்லையா?
உங்க‌ளுக்கு கேட்கிற‌தோ இல்லையோ
த‌லைவ‌னுக்கு கேட்டு விட்ட‌து.
அதோ ஓடி வ‌ருகிறான்.
முற்றாவேனில்
முக‌ம் காட்டும் முன்ன‌ரே
த‌ன் முக‌ம் காட்ட‌
அதோ
த‌விப்போடு வ‌ந்துகொண்டிருக்கிறான்.

ந‌க்கீர‌ன்
ப‌னைஓலைக‌ளில்
இந்த‌ எரிம‌லையைப்ப‌ற்ற‌ வைத்தும்
அவ‌ன் எழுத்துக‌ள் ம‌ட்டுமே
அவ‌ள் நெஞ்சில் கொழுந்துவிட்டு
எரிவ‌து
உங்க‌ளுக்கு சுடுகிற‌தா?
இதுவே செம்மொழியின் ஒளி.


==========================================ருத்ரா இ.பரமசிவன்.

06.06.2010




கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக