செவ்வாய், 20 மே, 2014

உழுவை கொடும்பல்


courtesy with thanks to GOOGLE IMAGES


உழுவை கொடும்பல்
===============================================ருத்ரா இ.பரமசிவன்

மைபொதி குவளையுண்கண் மறைபு
மணிவளை பொத்தி இமையுள் இருத்தி
துஞ்சல் செயிர்த்தன்ன தூவியள் நுடங்க‌
அன்னையும் அகல்வாள் நெஞ்சம் தேற்றி.
ஊழ் ஊழ் இமை பேழ் தூங்கா அன்னை 
வினவுங்காலை ஆண்டோர் ஈர்நிலா காட்டும்
மாடம் வழிய வெள்ளி ஒழுகும் 
முகம் அன்ன ஏய்க்கும் மதிகண்டு அமையும்.
மகளோ மென்னகை இமிழ்தர கள்ளிச்சிரிக்கும்.
முன்னொரு கால் வட்டில் ஏந்தி நிலவு காட்டி
ஏய்த்தாய் அன்னாய் நெய்வழி சோறுஅன்பின் ஊட்ட.
அது போன்ம் கண்டி இவண் வெண் பெருநிலா.
யானோர் நாள் பெண்ணைக்காய் 
குடை தேர் உருட்டக் கண்டாய் ஆற்றாது
பொற்றேர் ஈண்டு நீ இருக்க எற்றுக்கு
போய்த்தேர் உருட்டென  உள் உள் ஒள்குவை.
யாதாயினும் அன்னாய் நெஞ்சம் தேற்று.
நிலவு கண்டு நீள்துயில் ஒழுகு.
துடிவு கொள் இமைகள் துயர் அடுக்கிய கண்
நடுங்குதல் உற்று மெய் அதிரும்.
இரவின் குறி வரு இருந்தாள் குன்றன்
கையொடு செலவின் கொடுமலிக் காட்சி
கண்டுழி என் செயும் மணிவயிற்றாளென.
உழுவை கொடும்பல் வருடை கிழிப்ப‌
தோன்றக்கண்டு மழைக்கண் ஊழ்க்கும் மற்று
கைவளை நெரித்து கலங்கும் மன்னே.

=================================================ருத்ரா


பொருளுரைச்சுருக்கம்
__________________________________________________


கட்டிலில் புரண்டு புரண்டு படுக்கும் பெண்.கருப்பு மை பூசிய குவளை போன்ற அவள் கண்களின் இமைகளை அமுக்கி அமுக்கிப்பார்க்கிறாள்.தூக்கம் வரவில்லை.தூவி போல மெல்லிய அவள் துவள்கிறாள்.தாய் மகள் தூங்கிவிடுவாள் என்று அகல்கிறாள்.தாய் அவள் தூங்குகிறாளா இல்லையா என வினவிக்கொண்டேயிருக்கிறாள்.திரும்ப திரும்ப அம்மாவின் இமைகளும் பிளந்து பிளந்து துங்க மறுக்கிறது.மகளோ அன்னையிடம் "அதோ அந்த நிலவைப்பார்.பார்த்துக்கொண்டே தூங்கு"என்று சொல்கிறாள்.அப்படிச்சொல்லும் போது அவள் தனக்குள் திருட்டுத்தனமாக சிரித்துக்கொள்கிறாள்."நீ எத்தனை தடவை நிலவை காட்டி ஏமாற்றி சோறு ஊட்டியிருப்பாய்.இப்போது நானும் நிலவைக்காட்டி உன்னை ஏமாற்றப்போகிறேன்." என் நன்மை தானே உன் எண்ணம்.ஆம் என் காதலனோடு வீட்டை விட்டே புறப்படபோகிறேன்..என்ற நினைப்பில் சிரித்துக்கொள்கிறாள்.அன்னையும் தன் மகளின் முகம் நிலவு போல் பொங்கி பூரித்திருக்கக்கண்டு அமைதி கொள்கிறாள்.மகளுக்கு பழைய நாட்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.பனங்காய்களை குடைந்து வண்டி போல் செய்து தேர் ஓட்டி விளையாடிய நாட்கள் நினைவுக்குவருகின்றன. அப்போது அன்னை சொன்னதும் நினைவுக்கு வருகிறது."பொன்னில் வார்க்கப்போட்ட தேர் போல இருக்கிறாயே.(ஆண் குழந்தைகள் போல் தேர் ஓட்டும் துணிவு இவளுக்கு எப்படி வந்தது என்று அன்னைக்கு தோன்றியிருக்கலாம்).இருப்பினும் "உனக்கு எதற்கு இந்த பொ(ய்)ம்மைத் தேர்? என்று கேட்கிறாள்.அதெல்லாம் அங்கே அவளிடம் இப்போது நினைவலைகளாக வட்டமிடுகின்றன.இரவு நீள்கிறது.இன்னும் சிறிது நேரத்தில் காதலனுடன் ஓடி விடப் போகிறோமே? அன்னையின் நெஞ்சம் என்ன பாடு பாடும்?அவள் ஒரு கணம் நடுங்கிப்போகிறாள்.அன்னையின் கண்களுக்கு ஒரு புலியின் கோரைப்பற்களில் கிழிபடும் ஒரு வருடை மான் குட்டியின் காட்சி தான் தென்படுகிறது.இதை நினத்ததும் கண்களில் கண்ணீர் பிரளயமாய் பொங்க பொங்க என்ன செய்வது எனத்தெரியாமல் தன் கைவளையல்ளை நெரித்துக்கொண்டு செய்வதறியாமல் கலங்குகிறாள் அந்த பேதை மகள்


===================================================ருத்ரா இ.பரமசிவன்

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக