"ழ"கரம்.

திங்கள், 21 மார்ச், 2016

பெண்ணை மடல் மா

பெண்ணை மடல் மா
===============================ருத்ரா இ.பரமசிவன்

பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக்கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.
=======================================
விளக்க உரை
=========================================
பெண்ணை மடல்மா கலித்தல் அன்ன‌
எருக்கம் சூடி உருக்கம் பயின்று
ஆயிழைப் பொலங்கிளர் வாணுதல் எய்ய‌
இல் இல் அடுத்து ஊர்ந்தனை மன்னே!
பனைமர மட்டைகளில் செய்யப்பட்ட குதிரை குளம்பு அதிர வருவது போல் ஆரவாரத்துடன் தன் காதல் தோல்வியை ஊருக்கு உணர்த்தும்
வண்ணம் எருக்கம் பூ மாலை சூடி மன நெகிழ்ச்சி யுற்று வருகின்றவனே.நகைகள் அணிந்த தன் காதலியின் பொன் போல் சுடரும் அந்த நெற்றியழகைக் காண ஒவ்வோரு வீடாக உற்றுப் பார்த்து மெல்ல மெல்ல அசைந்து வருபவனே.
தகரக்கூந்தல் கனலன் குரலென‌
கூரிய வீசும் அவள் நிலை அறியா
புல்லியக் கல்லா நெடுமகன் போல
மடலேறு ஆண்தகை மடம் கொண்டன்ன‌
அவள் பயிர் மடமே உணரா நின்று
உகுத்தனை என்னே விரிஉளை அலரி.
தகரம் எனும் நறுமண மூலிகையின் நெய்பூசிய மணம் மிக்க அவள் கூந்தல் (தகரக்கூந்தல்) வெம்மை மிக்க கதிரவனின் ஒளிக்கூந்தல்
கற்றைகளைப்போன்று கூர்த்த நோக்கில் உன்னைப் பார்க்கும் அவளின் (காதல்) நிலையினை நீ அறியாமல் சிறுமை மிக்கவனாய் படிக்காத முட்டாளைப் போன்று (புல்லியக் கல்லா நெடுமகன் போல) இந்த பனைமடல் குதிரை ஏறி வந்து விட்டாயே! மடத்தனம் எனும் பெண்மை நிறைந்த "மடப்பம்"என்பது ஆண்மகனுக்கு கொஞ்சமும் பொருந்துமோ? அவளது மெல்லிய மடப்பத்தை (காதலை வெளிக்காட்டாத‌ சிணுக்கம் நிறைந்த மடம் எனும் உணர்வை) நீ இப்படி புரிந்து கொள்ளாமல் ஒரு முரட்டுத்தனமான மடத்தனத்தை இப்பொய்க்குதிரை ஏறியா வெளிப்படுத்துவது? உன்
குதிரையின் பொய்யான பிடரி மயிர்ப் பிசுறுகள் அலரிப் பூக்களைப்போல தெருவெல்லாம் உதிர்வது போல் நீ என் மீது இப்படி ஊரார் தூற்றும் பழிச்சொற்கள் பரவ விடலாமோ?(விரித்தனை என்னே விரியுளை அலரி)
தூற்றல் கொடுநோய் அவள் உற்றது அறிதி.
குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர்முள்
செத்தென போர்த்த நீள்வரிப்பெண்ணை
நெடுமா தொலைச்சிய‌ செல்தி! ஒள்ளிழை
உண்கண் பனியின் பசப்ப கண்டிசினே.
அவள் அடைந்த பழிச்சொல்லால் அவள் மிகவும் துயர் உற்றதை இப்போதாவது தெரிந்து கொள். குட்டையான மயிர்கள் நிறைந்த உடம்பினை உடைய கரடியைப்போல் முள் படர்ந்தாற்போன்றே (குரூஉ மயிர் யாக்கை உளியத்து படர் முள் செத்தென) அந்த வரிகள் நிறைந்த நெடிய பனைமடல் குதிரையை அழித்துவிட்டு (தொலைச்சிய) அல்லது கொன்று விட்டு திரும்பிச்செல்.ஒளிமிக்க அணிகலன்கள் பூட்டிய அவள் உன்னை நினைத்து பசலையுற்று கண்ணீர் மல்கும் காட்சியை இப்போதாவது கண்டு கொள்வாயாக.
வெள்ளிமீன் விண்குறி விரைதி!விரைதி!
எதிர்தர வருவாய் குன்றின் அடுக்கத்து
ஏந்திழை ஆங்கு ஏந்திக்கொள வாராய்.
நாளை விடிவெள்ளி தோன்றும் வேளை அவள் உன்னை சந்திக்கும் ஒரு அடையாளம் (விண்குறி) அறிந்து விரைந்து வந்துவிடு. குன்றுகளின் அந்த அடர்ந்த வெளியில் அவளை நீ எதிர்கொள்ள வந்துவிடு.பெருமை மிக்க அணிகள் அணிந்து அங்கு உனக்காக காத்திருக்கும் அவளை காதலுடன் சந்தித்துக்கொள்ள‌ விரைந்து நீ அங்கு வருவாயாக!
(தலைவன் மடலேறி தலைவிக்கு ஊர்ப்பழி ஏற்படுத்திய தவறைச் சுட்டிக்காட்டிய தோழி அவனுக்கு எடுத்து உரைத்தது.பனை மடல் குதிரை ஏறி தலைவன் தன் காதல் நிறைவேறாமல் போனதே என்று தன் துயரத்தை ஊருக்குச்சொல்லும் ஒரு வழிமுறை இது.தன்னைக் காதலிக்கவில்லை யென்றால் அமிலம் வீசிக்கொல்லும் இன்றைய அரக்கத்தனமான காதல் அல்ல அன்றைய சங்க காலக் காதல்)
=================================ருத்ரா இ.பரமசிவன்


இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 6:19 PM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்

திங்கள், 4 ஜனவரி, 2016

ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு






ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
================================================ருத்ரா


கல் பொருதிறங்கும் மல்லல் யாறு
புல் தடவி பூக்கள் வருடி
நறவம் துரூஉய் பல்லிணர்ப் பரவி
வள்ளி படர்ந்த வளமண் பொள்ளி
புடை யுடுத்த மன்றுகள் ஆக்கி
வேங்கை படுத்த வேங்கை வெரூஉய்
பெயரும் காட்சியும் மலியும்.
அற்றை வானின் அகல்வாய் திங்கள்
ஒளியுமிழ் காலை வருவாய் என்ன‌
விழிஅவிழ் குவளை விரியாநின்று
நோதல் யான் உற்றது அறிவையோ
வாடிய காந்தள் அன்ன ஊழியும்
கொடுவிரல் நுடங்கி வீழ்ந்ததும் அறிவையோ.
வளி அவி அடவி வெம்மை தாளா
ஆயிரங்கண்ணின் நுண்ணறைச்சிறையில்
ஆலும் ஆரும் வால்நீள் தும்பி
இனத்தொடு பெயரும் காட்சியும் மலியும்.
எல்லா!பொறிச்சிறைத்தும்பியும்
இமை அதிர்ந்து உதிர்க்கும் உதிர்க்கும்
ஆயிரம் ஆண்டுகள் தோற்றும்
காலம் நீள்பு கடுங்கண் இடையும்
ஒரு புது ஆண்டாய் மின்னல் விழிப்ப‌
என்று தருங்கொல் இரட்டும் படுமணி
நின் தேரின் இன்னொலி ஆங்கு.
அறியா நின்று ஆவிஉதிர்த்து
ஆவி விதிர்த்து மீளும் மீளும்
செங்கோட்டு யாழென நடுங்குவன் யானே!

==================================================

சுருக்க உரை
=============
ஓலைச்சுவடிகளின் தொன்மை காலத்தும் ஒரு தலைவி வெளிப்படுத்தும்
புத்தாண்டு ஏக்கம் பற்றிய பாடல் இது. தலைவன் வரவு நோக்கி
காத்து காத்து நொந்து போன தலைவிக்கு அது நெடிய யுகம் ஆனது.
திடீர் என்று மின்னல் வெட்டு போல் தலைவன் வரும் தேரின் ஒலி கேட்கும்
அந்த தருணமே அவளுக்கு புத்தாண்டு.

(விரிவுரை தொடரும்)

=============================================================
இடுகையிட்டது ruthraavinkavithaikal.blogspot.com நேரம் 2:42 AM கருத்துகள் இல்லை :
இதை மின்னஞ்சல் செய்க BlogThis! Xஸில் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் ( Atom )

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2021 ( 8 )
    • ►  செப்டம்பர் ( 4 )
    • ►  ஆகஸ்ட் ( 4 )
  • ▼  2016 ( 2 )
    • ▼  மார்ச் ( 1 )
      • பெண்ணை மடல் மா
    • ►  ஜனவரி ( 1 )
      • ஓலை நறுக்கில் ஒரு புத்தாண்டு
  • ►  2015 ( 3 )
    • ►  டிசம்பர் ( 2 )
    • ►  நவம்பர் ( 1 )
  • ►  2014 ( 5 )
    • ►  மே ( 5 )
Blogger இயக்குவது.